சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் தலித் மக்களை முன்னேற்றுவதற்காக கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அரசு அளித்து வருகிறது. ஓரிடத்தில் வசிக்கும் பெரும்பான்மையான சமூக மக்களிடமிருந்து தலித் மக்கள் மீது எவ்வித அச்சுறுத்தலோ, தாக்குதல் சம்பவங்களோ நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே கொண்டு வரப்பட்ட சட்டம் வன்கொடுமைத் தடுப்புச் சட்டமாகும். ஏற்கெனவே தலித்களை தீண்டாமைக் கொடுமையில் இருந்து காப்பதற்கு குடியுரிமை பாதுகாப்புச் சட்டம் இருந்தாலும், அதைவிடப் பாதுகாப்பானதாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் கருதப்படுகிறது. இச் சட்டம் 1989-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன்னதாகவே 1955-ல் தீண்டாமைக் குற்றங்கள் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச் சட்டம் நிறைவேற்றப்பட்ட சில ஆண்டுகளுக்குள் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அது குறித்து ஒரு குழு ஆய்வு செய்து, 1976-ல் அந்தச் சட்டம் சில திருத்தங்களோடு நிறைவேற்றப்பட்டது. அப்போது அச் சட்டத்தின் பெயரில்கூடத் தீண்டாமை என்ற சொல் வரக் கூடாது என்பதற்காக, அதன் பெயர் குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் என மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும், இச் சட்டத்தில் உள்ள ஓட்டைகளின் வழியாக தப்பிச் செல்வதற்கு வழிகள் அதிகமாக இருந்ததாலும், அச் சட்டத்தில் கடுமையான தண்டனைகள் இல்லாததாலும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தைவிட, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எதிரிக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வழிவகை செய்கிறது. இச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டால், பாதிக்கப்படும் நபருக்கு வழக்குப் பதிந்ததும் இழப்பீடு வழங்கப்படும். எதிரிக்கு 90 நாள்கள் ஜாமீன் வழங்கப்படமாட்டாது. எதிரிக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனை வரை விதிக்கப்படும் என இச் சட்டம் கூறுகிறது. இவ் வழக்கின் விசாரணை நேர்மையாகவும், தடுமாற்றம் இன்றியும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக, துணை காவல் கண்காணிப்பாளர் அளவில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி விசாரணை செய்ய வேண்டும் என இச் சட்டத்தில் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. தலித் மக்கள் உடல்ரீதியாக மட்டுமன்றி, மனரீதியாகக்கூட பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டம், இப்போது பல காரணங்களால் வலுவிழந்து கொண்டிருக்கிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. இச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுப்பதற்கு அதிகப்படியான வழிமுறைகளும், விதிமுறைகளும் இருப்பதால் காவல்துறை அதிகாரிகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவதற்குத் தகுதியுடைய புகாராக இருந்தாலும், அதைச் சாதாரண வழக்காக பதிந்து விசாரணை செய்கின்றனர். வழக்குப் பதியப்பட்ட பின்னரும், நீதிமன்றத்தில் அதன் விசாரணையை முறையாக நடத்துவதற்குச் சில காவல்துறை அதிகாரிகள் சரியான ஒத்துழைப்பு வழங்குவதில்லை. இதனால் நீதிமன்றம் வரை செல்லும் வழக்கு, நீதியைப் பெற முடியாமல் சென்றுவிடுகிறது. வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போதே, சில வேளைகளில் சாட்சிகள் மிரட்டப்படுவதால் வழக்கு தானாகவே வலுவிழந்துவிடுகிறது. மேலும், இச் சட்டம் குறித்த சரியான விழிப்புணர்வு போதுமான அளவுக்கு தலித் மக்களிடையே இல்லை. இதனால் அவர்கள் ஏதோ ஒரு தருணத்தில் பாதிக்கப்பட்டாலும், இச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடிவதில்லை. மேலும், சில சமூக இயக்கங்களின் தலைவர்கள் அண்மைக்காலமாக, இச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாலும், இதை ஓர் ஆயுதமாகக் கொண்டு மிரட்டுவதாலும் இச் சட்டத்தின் முகாந்திரமே மாறி வருகிறது. இப்படிப்பட்ட "பொறுப்பான' தலைவர்களால், நீதிமன்றங்களில் வழக்குகள் தோல்வியைத் தழுவுகின்றன. கடந்த இருபது ஆண்டுகளில் இச் சட்டத்தின் கீழ் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளில் 27.7 சதவிகித வழக்குகள் மட்டுமே தண்டனை பெற்றுள்ளன. மீதியுள்ள 72.3 சதவிகிதம் வழக்குகளில் தொடர்புடையவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2003-ம் ஆண்டில் இருந்து 2009 வரை பதிவு செய்யப்பட்ட 3,766 வழக்குகளில், 412 வழக்குகளில் மட்டும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 3,354 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இருபது ஆண்டுகளில் இச் சட்டத்தின் கீழ் தண்டனை பெறுகிறவர்களின் அளவு படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதே அளவுக்கு விடுதலை செய்யப்படுகிறவர்களின் அளவு அதிகரித்துச் செல்கிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தடம் மாறிச் செல்வதற்குக் காவல்துறை மட்டுமே முழு காரணம் எனக் கூறிவிட முடியாது. இச் சட்டத்தைப் பற்றி மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது, சில தலைவர்களின் சுயநலம் எனப் பல காரணங்களைக் கூற முடியும். ஆனால், இவர்கள் அனைவரும் செய்யும் தவறால் பாதிக்கப்படுவது தலித் மக்கள்தான். இத்தகைய நிலையில் இருந்து மாற்றுவதற்கு அரசு உடனடியாக பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் இச் சட்டம் கொண்டு வந்ததன் நோக்கம் முழுமையாக நிறைவேறும்.
DINAMANI DT 14.7.10
DINAMANI DT 14.7.10
No comments:
Post a Comment